ஆர்கே நகரில் தினகரன் ஜெயித்தது எப்படி? லைவ் ரிப்போர்ட்

avatar
சென்னை: அதிமுக தரப்பும் ஆர்.கே.நகரில் பணம் கொடுத்ததாக தினகரன் தரப்பு குற்றம்சாட்டுகிறது. அப்படியிருந்தும் தினகரன் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெ. மறைவால் காலியான ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் 40707 வாக்குகள் வித்தியாசத்தில், அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
திமுக வேட்பாளர் மருது கணேஷ் உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இதனிடையே, தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும், ஓட்டுக்கு ரூ.6000 வரை தரப்பட்டதாகவும் கூறி, தினகரன் தரப்பினரும், திமுகவினரும் தர்ணாவில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போதுவரை தினகரன் அந்த குற்றச்சாட்டை கைவிடவும் இல்லை.

இப்படியிருந்தும் தினகரன் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து, ஆர்.கே.நகருக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில், பலரிடம் பேச்சுகொடுத்தோம். ஆர்.கே.நகர்வாசிகள் கருத்துக்களை பாருங்கள். அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கூறி சிலர் ஓட்டுக்கு ரூ.6000வரை பணம் கொடுத்து சென்றது உண்மைதான். ஆனால், ஒரு குடும்பத்தில் 6 பேர் இருந்தால் 3 பேருக்கு மட்டுமே அவர்கள் பணம் கொடுத்தனர். இதனால் எங்களுக்கு கோபம் ஏற்பட்டது.

அதேநேரம், தினகரன் தரப்போ, ஓட்டுக்கு ரூ.10,000வரை தருவதாக எங்களுக்கு தகவல் வந்தது. வீட்டிலுள்ள எல்லா ஓட்டுகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் தரப்பு பணம் கொடுத்ததாக தகவல் கிடைத்தது. இதனால் தினகரனுக்கு வாக்குகளை அளிக்க முடிவு செய்தோம். கைக்கு பணம் வராவிட்டால் கூட 20 ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்ததால் எங்களுக்கு நம்பிக்கை வந்தது.

கடந்த முறை இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. அப்போது தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு ஓட்டு போட சொல்லி சிலர் கை நிறைய பணம் கொடுத்தனர். இப்போது அவர் சிக்கலில் இருப்பதால் பணத்தை தர முடியவில்லை. ஆனால் கடந்த முறையே போலவே விரைவில், தாராளமாக எங்களுக்கு அள்ளி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால்தான் தினகரனுக்கு வாக்குகள் அளித்தோம்.

எங்களில் சிலர் ரூ.6000 கொடுத்ததற்கு நன்றி விசுவாசமாக, அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தனர். ஆனால் பெரும்பாலானோர் தினகரன்தான் தாராள மனதோடு அளித்தருவார் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இதனால்தான் எங்கள் ஆதரவு தினகரனுக்கு கிடைத்தது. இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்.

திமுக வேட்பாளர் டெபாசிட் இழக்க காரணம் என்ன என்பதையும் அவர்களே சொல்கிறார்கள். "திமுக சார்பில் ஓட்டுக்கு பணம் தரவில்லை. அத்தோடுவிடவில்லை. பணம் கொடுத்த கட்சிக்காரர்களையும் வழிமறித்துக்கொண்டு, போராட்டம் நடத்திக்கொண்டு, அவர்கள் ஆதரவு டிவி சேனல்களில் அதை லைவாக ஒளிபரப்பி வர வேண்டிய பணத்தை வரவிடாமல் கெடுத்துவிட்டனர். தானும் தராமல், தந்தவர்களையும் தரவிடாமல் செய்ததால்தான் மருதுகணேஷ் டெபாசிட் இழக்க வேண்டி வந்தது" என்றனர் ஆவேசமாக.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!